ராஜபாளையம்: தமிழகத்தின் டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் திட்டத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி தலைமை விகித்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வேங்கட ரமணா முன்னிலை வகித்தார். ராஜாஜி இலவச மருத்துவ மைய செயலாளர் ராஜாராம் வரவேற்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராஜாஜி இலவச மருத்துவ சேவை மையத்தின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வழங்கினார். மேலும், ராஜாஜியின் 146-வது பிறந்தநாள் விழாவில் ஜி.கே.வாசன் இலவச ஆம்புலன்ஸ்ஸை வழங்கி, அதன் சேவையை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது: "மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.944 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவின் படி முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை.
தமிழகத்தின் டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் மேகதாது அனைத்து திட்டத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரிக்க தேவையான வழிகளை கேரள அரசு ஏற்படுத்தி தர வேண்டும். 2026ல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது" என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.