போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசை வலியுறுத்த வேண்டும்: சிஐடியு கோரிக்கை


கோப்புப் படம்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசை வலியுறுத்த வேண்டும் என எம்எல்ஏ-க்களிடம் சிஐடியு கோரிக்கை விடுத்து வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: சேவை நோக்கத்தோடு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கப்படும் காரணத்தால் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட அரசு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டுமென கோரி வருகிறோம். ஆனால், இழப்பை ஈடுகட்ட தொழிலாளர்களின் சேமிப்பு பணம் ரூ.15,000 கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன.

கடந்த 18 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுமார் ரூ. 3500 கோடி பணப்பலன் நிலுவை உள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக 93,000 போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்பும், நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதற்குப் பதிலாக தேவையற்ற முறையில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடும் மறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டமும் அமல்படுத்தப்படவில்லை. ஊதிய ஒப்பந்தமும் பேசி முடிக்கப்படவில்லை. இவை தொடர்பாக அரசுக்கு முறையீடு செய்து போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்கி, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும், பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் சந்தித்து கடிதம் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x