புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள சின்ன வீராம்பட்டினம் பகுதியில் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அந்த இடத்தில் ரெஸ்டோபார் கொண்டு வர முயற்சி செய்வதாக மக்கள் அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி 80 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நேற்று (டிச.08) மதியத்திற்கு மேல் பள்ளியில் இருந்த மாணவர்களை அருகாமையில் இருக்கும் மணவெளியிலுள்ள ஓடவெளி பள்ளியில் படிக்குமாறு அதிகாரிகள் அறிவித்து பள்ளியை சீல் வைத்தனர்.
இதனை கண்டித்து சின்ன வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். பள்ளி அதே இடத்தில் இயங்க வேண்டும் என்றும் சுயநலத்திற்காக வேறு இடத்திற்கு மாற்றப்படுவது கண்டிக்கத்தக்கது என் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பள்ளியில் ஒட்டப்பட்ட நோட்டீஸில் சின்ன வீராம்பட்டினம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து மாணவர்களை ஓடவெளி (ஏ) அரசு தொடக்கப் பள்ளிக்கு மாற்றவும், அரசு தொடக்கப் பள்ளியின் சிதிலமடைந்த நிலை மற்றும் ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை காரணமாக இரு பள்ளிகளையும் இணைக்கவும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று கிராம மக்கள், குழந்தைகள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், "தற்போது சின்ன வீராம்பட்டினத்தில் சுற்றுலாவை வளர்க்க கடற்கரை மேம்பாட்டு திட்டம் வரப்பட்டது. மீன்வளத்துறை அலுவலகத்தை கார் பார்க்கிங்காக மாற்றி விட்டனர். பள்ளியை தற்போது மூடுகின்றனர். ஏனெனில் ரெஸ்டோபார் அங்கு வரவுள்ளதாக தெரிகிறது. அங்கன்வாடியை எடுக்கவுள்ளனர். அரசு சலுகையே தேவையில்லை. பள்ளி, அங்கன்வாடி, பஸ் வசதி தேவை. நாங்கள் ஊரை விட்டுதரமாட்டோம். வீட்டுக்கு ஒரு வேலை தருவதாக பொய் சொல்லி அத்திப்பட்டு போல் சின்ன வீராம்பட்டினமா ஊர்பேரையே எடுத்து விட்டனர்.
நல்ல பஸ் வந்தது. அதை நிறுத்தி விட்டு டூரிஸ்ட் பஸ் விட்டனர். மேப்பிலும் இல்லை. தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை கூட தரவில்லை. சுற்றுலா தலமாக மாற்ற ஊர் மக்களை வெளிியேற்றலாமா? பராமரிப்பு வேலை பார்ப்பதாக சொன்னார்கள். தற்போது இடிப்பதாக கூறுகிறார்கள்" என்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கூறுகையில், "அரசுக்கு சொந்தமான, நல்ல நிலையில் உள்ள கட்டிடத்தில், ஓர் அரசு ஆரம்பப்பள்ளி நெடுங்காலமாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் அந்த அரசு பள்ளியினை இரண்டு கிலோமீட்டர் தொலைவிலான ஓடைவெளி ஊரில் உள்ள மற்றொரு பள்ளியோடு இணைக்கப் போவதாக கூறிக்கொண்டு, நல்ல நிலையில் இயங்கி வரும் அப்பள்ளிக்கூடத்தை இடிக்கப் போவதாக திடீரென அரசு தரப்பில் அறிக்கை ஒட்டியுள்ளனர்.
உண்மையில், சிறிய ஊராகிய சின்ன வீராம்பட்டினத்தில் பள்ளிக்கூடம் இருப்பதால் ரெஸ்ட்டோ பார் நடத்த உரிமம் வழங்க இயலவில்லை என்பதாலேயே பள்ளிக்கூடத்தையே இடித்து அகற்றிவிட்டு அங்கு ரெஸ்ட்டோ பார் ஏற்படுத்த புதுச்சேரி அரசே இம்மாதிரியான மக்கள் மற்றும் மாணவர்கள் விரோத செயலில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகின்றது. கல்வி கற்பிப்பதில் அக்கறை காட்டும் நமது தமிழர் மரபிற்கு முற்றிலும் எதிராக, மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கப் பாடுபடவேண்டிய அரசே இப்படி ஒரு பள்ளிக்கூடத்தையே இடித்து அகற்ற முற்படுவது எவராலும் ஏற்க முடியாது செயலாகும்! இதை காங்கிரஸ் கண்டிக்கிறது. பள்ளி தொடர வேண்டும். ரெஸ்ட்டோ பார் உள்ளிட்ட, எவ்வித மதுக்கடைகளையும் புதிதாக திறக்கக்கூடாது" என்றார்.