திருச்சி: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாகண்ணு, மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர்கள் நேற்று கூறியதாவது: மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர மறுக்கிறது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.24 லட்சம் கோடி வரை கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த நவ. 26-ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெக்ஜித்சிங் டல்லேவாலிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வராததும், டெல்லிக்கு பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தியதும் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டம், விளை நிலங்கள், நீர்நிலைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தமாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது. நிலம் தர மறுக்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்கிறது.
எனவே, மத்திய அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், டல்லேவால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், தமிழக அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் வரும் 16-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்