கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி: ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை, தலைமன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைக் கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல், கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர் அமைப்பினர், தங்கச்சிமடம் அரசு வங்கிக் கிளை முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மீனவர் சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர்

x