விஜய், ஆதவ் அர்ஜுனா கருத்துகளால் சலசலப்பு: சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை.
நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று பேசினார்.
அதே நிகழ்வில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். கொள்கை பேசிய கட்சிகள் இதுவரை அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை. 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்” என்று பேசியனார். இந்தப் பேச்சுகள் தமிழக அரசியல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கருத்துக்கு திருமாவளவன் எதிர்வினை: “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும் அவர், “விஜய் குறிப்பிடுவது போல திமுகவோ, அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளோ, எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்துக்குப் பணிந்து, இணங்கி முடிவெடுக்க முடியாமல் தேங்கி நிற்கிற நிலையில் விசிகவும் நானும் இல்லை” என்று கூறினார்.
ஆதவ் அர்ஜூனா பேசியது தவறு: திருமாவளவன்: “ஏற்கெனவே உயர்நிலைக் குழுவில் நாங்கள் விவாதித்தப்படி, கட்டாயமாக ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம். அவர் விசிகவில் முக்கியமான ஒரு பொறுப்பில் இருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர் என்பது ஒரு முன்னணி பொறுப்பு. எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற ஒரு நிலைப்பாட்டை இதுவரை நாங்கள் யார் மீதும் எடுத்ததில்லை.
எனவே, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கும், கட்சியின் கட்டுப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கக் கூடிய வகையில், ஆதவ் அர்ஜுனா பேசி வருகிறார் என்ற நிலையில், உயர்நிலைக் குழுவில் ஏற்கெனவே நாங்கள் விவாதித்தப்படி அறிக்கை அனுப்புவோம்,” என்று திருமாவளவன் கூறினார்.
மேலும், “ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆதவ் அர்ஜுனா பேசியது தவறு. அவர் பேசியது தன்னுடைய கருத்தாக இருந்தாலும்கூட, விசிகவில் அவர் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். அது கட்சியின் கருத்தாகத்தான் மக்களால் பார்க்கப்படும்” என்றார் திருமாவளவன்.
விஜய், ஆதவ் பேச்சுக்கு உதயநிதி ரியாக்ஷன்: திமுகவுக்கு எதிராக விஜய் பேசிய கருத்துகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்று தெரிவித்தார். மேலும், மன்னராட்சி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “யாருங்க இங்க பிறப்பால் முதல்வரானது? மக்களால் தேர்ந்தெடுத்துதான் இருக்கிறோம். மக்களாட்சிதான் நடக்கிறது. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசி இருக்கிறார்” என்று ஆவேசமாக கூறினார்.
“அவர்கள் அதிமேதாவிகள்...” - சேகர்பாபு காட்டம்: “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல... 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கைப்பற்றும்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
“திமுக நடத்துவது மன்னராட்சி அல்ல” - அமைச்சர் ரகுபதி - “தன்னோடு விசிக தலைவர் திருமாவளவன் வருவார் என்பது நடிகர் விஜய்யின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன் என்று திருமாவளவன் தெளிவாக கூறிவிட்டார். திமுக மன்னராட்சியை நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சியைத்தான் நடத்துகிறது. வாரிசு அரசியல் இல்லை. உழைப்பினால்தான் வந்துள்ளோம்.
திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்றுக்கொண்ட தலைவர்தான் ஸ்டாலின். அதேபோலதான், உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்களின் வலியுறுத்தலினால் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. வாரிசு என்ற அடிப்படையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வரவில்லை” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு அறிவுரையும், ஆதவுக்கு எச்சரிக்கையும் வழங்கிய பாஜக: “ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த லாட்டரி பணத்தில் நடக்கும் விழாவில் உள்ள அரசியல் சூழ்ச்சியை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை கோட்பாடுகளை வாழ்வியல் நெறிகளை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதற்கு நல்லவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். திருமாவளவன் ஏமாந்தது போல், விஜய்யும் ஏமாந்து விடக்கூடாது" என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்தார்.
மேலும், “பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் ஆதவ் அர்ஜுனா செய்த சட்டவிரோத நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களை மக்களின் முன்னே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
‘செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்’ - அண்ணாமலை: அதானி விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவின் வரலாறும், ஜாமீன் அமைச்சரின் வரலாறும் உலகறிந்த உண்மை. எனவே, திமுக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கேள்வி எழுவது இயல்பு.
அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்துச் செலவிடும்போது, மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் எழத்தான் செய்யும். அதற்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. அதைவிடுத்து, வழக்குத் தொடருவோம் என்ற உருட்டல், மிரட்டல்கள் எல்லாம், எந்த தவறையோ மறைக்க நடக்கும் முயற்சியாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். இதற்கு எல்லாம் பாஜக பணிந்து செல்லாது” என்று கூறியுள்ளார்.
உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 11- ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்” சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இம்மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 10-ம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 11-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராவிஸ் ஹெட் அதிரடியால் ஆஸி. 337 ரன்கள் குவிப்பு! - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 337 ரன்களை குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி 140 ரன்களை குவித்தார். ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 128 ரன்களை சேர்த்து திணறிய நிலையில் இருந்தது.
டெல்லியில் தொழிலதிபர் சுட்டுக் கொலை: டெல்லியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 52 வயது தொழிலதிபர் ஒருவரை மர்ம நபர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது