“இந்தியாவில் யாராக இருந்தாலும் பிறப்பால் முதல்வராக முடியாது” - கார்த்தி சிதம்பரம்


கார்த்தி சிதம்பரம் (கோப்புப் படம்)

சிவகங்கை: “இந்தியாவில் யாராக இருந்தாலும் பிறப்பால் முதல்வராக முடியாது” என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரை யார் போற்றினாலும் வரவேற்கிறேன். இதுவரை அம்பேத்கரை பற்றி யோசிக்காதவர்கள் கூட, அவரை பற்றி பேசுகிறார்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன். இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. தேர்தலுக்கு 15 மாதங்கள் உள்ள நிலையில் விஜய் மேடை பேச்சை சீரியஸாக எடுத்து கொள்ள தேவையில்லை.

இந்தியாவில் யாராக இருந்தாலும் பிறப்பாக முதல்வராக முடியாது. தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பெற்று தான் வர முடியும். பிறப்பால் எந்த அரசு பதவியையும் பெற முடியாது. கோயில் அறங்காவலர் கூட வர முடியாது. கடந்த 1947 சமயத்திலேயே மன்னராட்சியை காங்கிரஸ் ஒழித்துவிட்டது. இந்தியாவில் மன்னராட்சி இல்லை. சரித்திரம் புரியாதவர்கள் தான் மன்னராட்சி குறித்து பேசுவர். மணிப்பூர், வேங்கைவயல் பிரச்சினைகளை ஒன்றாக பார்க்க கூடாது.

வேங்கைவயல் பிரச்சினைக்கு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் சென்று பார்த்தனர். இதில் குற்றவாளி யார் என்று கண்டறியாமல் இருக்கலாம். ஆனால் மணிப்பூரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் புரிதல் இல்லாதவர்கள் தான் இரு பிரச்சினையும் ஒன்றாக பார்ப்பார்கள்” என்று அவர் கூறினார்.

x