திருப்பூர்: காங்கயம் அருகே சிவன்மலையில் நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்திருப்பது, விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காங்கயம் அருகே சிவன்மலை அரசம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. ஆடுகள் வளர்த்து வந்தார். இவரது தோட்டத்தில் ஆடுகளை பட்டி போட்டு பாதுகாத்து வந்தார். இந்நிலையில் இன்று (டிச.7) காலை வழக்கம் போல்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு விட சென்றபோது, தோட்டத்து பட்டியில் ஆடுகள் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக அக்கம் பக்கத்து தோட்டத்து சேர்ந்தவர்களிடம் ராமசாமி விசாரித்தபோது, தெருநாய்கள் சுற்றிக்கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இதில் பட்டிக்குள் புகுந்த தெரு நாய்கள் ஆடுகளை கடித்திருப்பதும் கண்டறியப்பட்டது.8 ஆட்டுக்குட்டிகள் உட்பட 5 ஆடுகளை கடித்தது தெரியவந்தது. இதில் 11 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 2 ஆடுகள் காயம் அடைந்தன.
இது தொடர்பாக காங்கயம் போலீஸார் மற்றும் சிவன்மலை கிராம நிர்வாக அலுவலர் எம். சுகன்யா உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த ஆடுகள் கால்நடை மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொல்வது தொடர்கிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசிடம் பேசி 45 நாட்களுக்குள் உரிய நிவாரணம் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி முறையாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து கால்நடை விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.