வரி உயர்வு,18% ஜிஎஸ்டி பிரச்சினை: திருப்பூரில் டிச.18-ல் கடையடைப்பு போராட்டம்


திருப்பூர்: வரி உயர்வு பிரச்சினை, வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பு உள்ளிட்டவைகளால், திருப்பூரில் நாளை (டிச.8) முதல் கடைகளில் கருப்புகொடி ஏற்றம் மற்றும் வரும் 18-ல் கருப்புக் கொடி போராட்டத்தையும் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியின் சொத்துவரி பிரச்சினை, வாடகை கட்டிடங்களுக்கான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, தொழிலை நசுக்கும் மின் கட்டண விவகாரங்களால் வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக, திருப்பூரில் நடந்த அனைத்து வியாபாரிகள் அவசர ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் வியாபாரிகள் தங்கள் நிலைமையை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் நாளை (டிச. 8) முதல் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றியும், வரும் 18-ம் தேதி கடை அடைப்பு நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

இது தொடர்பாக திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் துரைசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''வியாபாரிகள் உட்பட பொதுமக்களை அரசு காப்பாற்ற வேண்டும். வரி உயர்வு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால் இந்த மாவட்டத்தில் கோலோச்சிய விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் முடிவடையும் தருவாயில் உள்ளன. உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரி பல மடங்கு இருக்கும் நிலையில், தற்போது புதிய வரியால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். புதிய வரிகள் விதிக்கப்பட கூடாது. ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும். வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கடை உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்றைக்கு தொழில் செய்ய முடியாத நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் நிலையை அரசுகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) முதல் கடைகளில் கருப்புக்கொடி கட்டியும், வரும் 18-ம் தேதி கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபடுகிறோம். இதில் தொழில்துறை உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவையும் நாடி உள்ளோம். திருப்பூர் மாநகர் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெறுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

x