ஹெலிகாப்டர் விபத்து 3-ம் ஆண்டு நினைவு நாள்: நீலகிரியில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி


குன்னூர்: இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத்தின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில், மலர் வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு எம்.ஐ.ரக ஹெலிகாப்டரில் வந்த போது நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் ஹெலிகாப்டர் கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அச்சம்பவம் நடைபெற்று 3 ஆண்டு நினைவு தினத்தை அடுத்து, விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் உள்ள நினைவு தூணில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வர் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு உயிரிழந்த 14 பேரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராணுவ இசையுடன் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

x