களத்துக்கே வராமல் பேசுகிறார்; 234 தொகுதியிலும் வெல்வோம் - விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி


சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி என்ற திமுகவின் நம்பிக்கை வீணாகும் என சிலர், அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்துக்கே வராதவர்கள் பேசுகிறார்கள் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “ முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும், தமிழ்நாடும் சுபிட்சமாக இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி என்ற நம்பிக்கை வீணாகும் என சிலர், அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்துக்கே வராதவர்கள் பேசுகிறார்கள்.

எங்கள் நிலைபாடு 200 அல்ல, 234-யும் திராவிட மாடல் கைப்பற்றும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக, எப்போதெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் ஏவப்படுகிறதோ அப்போதெல்லாம், கழகத் தொண்டன் 100 கி.மீ வேகத்தில் பயணிப்பான். மீண்டும் 2026-ல் முதல்வர் ஸ்டாலினை அரியணை ஏற்றும்வரை எங்கள் வேகம் குறையாது. திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. அதில், யாராவது குறையும் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய விஜய், "மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்." என்று பேசியதும் சலசலப்பை உருவாக்கியது.

x