சென்னை: ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என அக்கட்சியின் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில்,“திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட, விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள் . ‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துருவிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும், பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதல்வர் ஆகக்கூடாது என பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பை கிளப்பினார்.
இந்த விழாவில் பேசிய விஜய், "வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்னைக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. நான் இப்போது சொல்றேன், அவர் மனசு முழுக்க முழுக்க இன்னைக்கு நம்ம கூடத்தான் இருக்கும்" என்று பேசியதும் சலசலப்பை உருவாக்கியது.
விஜய் கருத்து தொடர்பாக பதிலளித்த திருமாவளவன், “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கொடுத்த அழுத்தம் என்பதை போன்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாக முடிவெடுத்தேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை” என்று கூறினார்.