திருச்சி: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கொடுத்த அழுத்தம் என்பதை போன்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நேற்று அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கருத்து தொடர்பாக, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கொடுத்த அழுத்தம் என்பதை போன்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாக முடிவெடுத்தேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை
எங்கள் இருவரையும் வைத்து உறுதிபடுத்தாமலேயே அதிகாரப்பூர்வமாக அரசியல் சாயம் பூசியது யார், பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கிவிடுவார்கள் என்பதால் தான் நான் விழாவில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியை வைத்து காய் நகர்த்தும் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போல வாய்ப்பை தர நான் விரும்பவில்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும், பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதல்வர் ஆகக்கூடாது என பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பை கிளப்பினார்.
இந்த விழாவில் பேசிய விஜய், "வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்னைக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. நான் இப்போது சொல்றேன், அவர் மனசு முழுக்க முழுக்க இன்னைக்கு நம்ம கூடத்தான் இருக்கும்" என்று பேசியதும் சலசலப்பை உருவாக்கியது.