சென்னை: திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவர் இன்று பேசிய கருத்துகள் 100% தவறு. இதுபற்றி கட்சியின் உயர்மட்ட குழு சார்பில் அவரிடம் விளக்கம் கேட்போம். அதன் பின், இதுபற்றி முடிவு எடுப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து. விசிகவில் இருந்தாலும் ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆஃப் காமன் என்ற அமைப்பின் சார்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடைய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. கட்சியில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. நாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணியில் விசிகவிற்கு பங்கு உண்டு.
விசிக-தவெக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது ஆதவ் அர்ஜூனாவின் விருப்பமாக இருக்கலாம். அவருடைய செயல்திட்டமாக இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. நாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டணயில் இருக்கிறோம் என்று பலமுறை கூறிவிட்டேன். அந்த கூட்டணியை உருவாக்கியதில், விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு பங்கு உண்டு. அந்த வகையில், அந்த கூட்டணியில் தொடர்கிறோம், தொடர்வோம் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன்.
கூட்டணியை முறிக்கும் முயற்சியில் ஆதவ் அர்ஜூனா இருக்கிறாரா என்பதை, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவர் இன்று பேசிய கருத்துகள் 100% தவறு. இதுபற்றி கட்சியின் உயர்மட்ட குழு சார்பில் அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன் பின், இதுபற்றி முடிவு எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும், பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதல்வர் ஆகக்கூடாது என பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பை கிளப்பினார்.