அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக பங்கேற்காதது ஏன்? - ஹெச்.ராஜா கேள்வி


காரைக்குடி: டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக பங்கேற்காதது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

காரைக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது: 1975-ல் அரசியலமைப்பு சட்டத்தை முடக்கி காங்கிரஸ் சர்வாதிகார ஆட்சிபுரிந்தது. அதற்குப் பரிகாரமாகத்தான் தற்போது அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை காங்கிரஸார் கையில் வைத்துக்கொண்டு திரிகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தோற்றுப்போன ஆட்சி நடக்கிறது. சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் உயிரிழந்தனர். மோசமான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அகம்பாவத்துடன் பேசியுள்ளார்.

டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது ஏன்? மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் நண்பர்கள்தான்.

மணிப்பூருக்கு பிரதமர் ஏன் போகவில்லை என்று கேட்கும் நீங்கள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் போகாதது ஏன் என்று கேட்கவில்லை. வெள்ளப் பாதிப்பில் தமிழக அரசு சரியாக செயல்படாததால்தான், பொறுமை இழந்த மக்கள் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

x