காரைக்குடி: ”புயல் பாதித்த மாவட்டங்களில் எத்தனை பேர் கேட்டாலும் சிறுதொழில் கடன் வழங்கப்படும்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கையிலும், நிவாரண உதவிகள் உதவி வழங்குவதிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் டிச.6ம் தேதி முதல் சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறுதொழில் புரிவோருக்காக கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப் படுகின்றன.
தகுதியான அனைவரும் விண்ணப்பித்து பயன் பெறலாம். இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. எத்தனை பேர் கேட்டாலும் சிறுதொழில் கடன் வழங்கப்படும். ஏற்கெனவே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல் பாதித்தபோது அரசு வழங்கிய சிறுதொழில் கடன்கள் வணிகர்களுக்கு பெரும் பயனை அளித்தது. புயல் பாதிப்பு குறித்த எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதவி அளித்து வருகிறார்" என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.