சென்னை: 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது என 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்
சென்னையில் இன்று நடைபெற்று வரும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் புத்தகத்தை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார்.தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்குப் பிறகு விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். 2014ல் குடும்ப அரசியல், ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மோடி ஆட்சியை பிடித்தார். அவரை இதுவரை அசைக்க முடியவில்லை. அதேபோல தமிழகத்தில் மதம், சாதிக்கு எதிரான கருத்தியலை உருவாக்கியதை போல, ஊழலுக்கு எதிரான கருத்தியலை கொண்டுவர வேண்டும்.என் தாய் விவசாயியாக இருந்து தற்கொலை செய்துகொண்டார், அதற்கு காரணம் ஊழல்தான்” என்றார்
முன்னதாக புத்தகத்தை உருவாக்கிய ஆதவ் அர்ஜுனா குறித்து வீடியோ ஒன்று விழா மேடையில் ஒளிபரப்பப்பட்டது. அதில், ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தை தொடங்கியது அரசியலில் அவரது ஈடுபாடு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது குறித்து விவரிக்கப்பட்டது. அதில், ‘ஆதவ் அர்ஜுனா. 2015 ஆம் ஆண்டு திமுகவுக்கு தேர்தல் யூகங்கள் வகுத்துக் கொடுக்கும் குழுவில் இணைந்தார். 2019 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வியூகங்கள் குறித்து செயல்படுத்துவதற்காக 'ஒன் மைண்ட் இந்தியா' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த நிறுவனம் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் பகுப்பாய்வு செய்து தேர்தல் வியூகத்தை கட்டமைத்தது. திமுகவுக்கான தேர்தல் உத்திகளை நவீனப்படுத்தவும் ஐ பாக் நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவர் ஆதவ் அர்ஜுனா. அவருடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றியவர் ஆதவ் அர்ஜுனா. அந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது" எனக் கூறப்பட்டுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது.