தென்னை மரங்களை வேரோடு சாய்த்த காட்டு யானைகள் - ராஜபாளையம் விவசாயிகள் அச்சம்


ராஜபாளையம் அருகே தென்னை மரங்களை வேரோடு சாய்த்த காட்டு யானை கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம், சேத்தூர் பகுதிகளில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் தென்னை மரங்களை வேரோடு சாய்த்ததால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை மரங்களும் மற்றும் மா, பலா, வாழை மரங்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 6-வது மைல் நீர்த்தேக்கம் பகுதியில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டுள்ள யானை கூட்டம் இரவு நேரங்களில் விவசாய தோட்டத்தில் வேலியை சாய்த்து உள்ளே புகுந்த காட்டு யானைகள 10 தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், 20-க்கும் மேற்பட்ட மா மரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தி நிலையில், தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதேபோல், சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒற்றை பனை காடு பகுதியில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானை விவசாய தோட்டத்திற்குள் புகுந்து மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு, பந்தப்பாறை பகுதியில் தோட்டத்திற்குள் காட்டு யானை புகுவதை தடுக்க ரசாயனம் தடவிய துணிகளை கட்டியும், பட்டாசு வெடித்தும் விரட்டுவதாலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவரத்தில் அகழிகள் அமைக்கும் பணி நடப்பதால் அங்கிருந்து இடம் பெயர்ந்து ராஜபாளையம் மலையடிவாரப் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

x