“திமுகவின் 33வது அணியாக செயல்படுகிறது காவல்துறை”- எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு


கரூர்: திமுகவின் 32 அணிகளோடு 33வது அணியாக காவல்துறை தரம் கெட்டு வேலை செய்கிறது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் குற்றச்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் இன்று (டிச.6ம் தேதி) முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது: "கரூர் மாவட்டத்தில் அதிமுக நடத்தும் நிகழ்ச்சிகள், கொடி கட்டுவது, கூட்டம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தால் வாய்வழி உத்தரவாக அனுமதி வழங்கி விட்டு நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று அனுமதியில்லை என கடிதம் வழங்குகின்றனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக இது தான் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இல்லாதிருந்த நிலை தற்போது மீண்டும் தலையெடுத்துள்ளது.

பிரேம் மஹாலில் அண்மையில் ஆளுங்கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது அதற்கு கொடி கட்ட, பிளெக்ஸ் அனுமதி வழங்கிவிட்டு மறுநாள் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாலை 7 மணிக்கு கொடி கட்டுவதற்குக்கூட அனுமதிக்கவில்லை. இரவு 11.45 மணிக்கு நான் சம்பவ இடத்திற்கு வந்து பேசிய பிறகு அனுமதித்தனர். தாந்தோணி ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக கொடி கட்ட அனுமதி கடிதம் கொடுத்தும், கொடி கட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.யிடம் பேசிய பிறகு கொடி கட்ட அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்.பி, டிஎஸ்பியிடம் கேட்டால் நாங்கள் அனுமதி மறுக்கவில்லை என்கின்றனர். அப்படியென்றால் இதன் பின்னணியில் இருப்பது யார்?. திமுக 2 மாதங்களுக்கு முன்பு வைத்த 100 பிளெக்ஸ்கள் அகற்றப்படாமல் உள்ளது. அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வைத்த 3 பிளெக்ஸ்களை காவல் துறையினரே அகற்றுகின்றனர். காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் திமுகவினர் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். காவல் துறையினர் இதனை கண்டு கொள்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 பேரை கைது செய்து திமுகவினர் 3 பேரை விட்டுவிட்டு 8 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மணல் கடத்தல் குறித்து தகவல் அளித்த அதிமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்கின்றனர். புறம்போக்கு நிலங்களில் 70 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை பெயரளவில் இடித்துவிட்டு அதிமுக நிர்வாகி செங்கல் சூளையை அகற்றி விட்டனர். அவர் தனியார் பட்டா இடத்தில் செங்கள் சூளை வைத்தால் கைது செய்கின்றனர். அங்கிருந்த லாரி, ட்ராக்டர் ஆகியவற்றை காவல் துறையினரே வாங்கல் காவல் நிலையத்திற்கு எடுத்து செல்கின்றனர்.

அவர்கள் காலியான வாகனங்களை எடுத்து சென்று மணலுடன் கொண்டு நிறுத்தி பொய் வழக்கு போட்டு அதிமுகவை சேர்ந்தவரை கைது செய்தனர். கல்லூரி படிக்கும் அவர் மகனை நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்து போட வைக்கின்றனர். வாங்கல் காவல் நிலையத்தில இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள் பொய் வழக்கு போடுவதே வேலையாக உள்ளனர். இதுதொடர்பான வீடியோ வழங்கியவர்களை மிரட்டுகின்றனர்.

அதிமுகவினர் மீது புகையிலை, மணல், போதை மாத்திரை வழக்குகள் பதிவு செய்து அதிமுக நிர்வாகிகளை மிரட்டி வருகின்றனர். திமுகவில் 32 அணிகள் இருக்கின்றன. இதில் காவல் துறை 33வது அணி போல தரம்கெட்டு வேலை செய்கின்றனர். வாங்கல் காவல் நிலையத்தினர் பொய் வழக்கு போடுவதே வேலையாக உள்ளனர். கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதி படங்கள் வைக்கப் பட்டுள்ளன. கருணாநிதி நினைவு நாளில் மாநகராட்சி வளாகத்தில் அவர் படம் வைத்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அதிமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஜெயலலிதா படத்தை வைத்து மரியாதை செலுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு எவ்வித பதிலும் அளிக்காத நிலையில் கேட்டுகளை பூட்டி போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் எஸ்.பி.யிடம் செல்ல முடியாது. அதிமுகவினரை தொந்தரவு செய்தால் இதேபோல் தேவையில்லாத வேலைகளை செய்தால் அதற்கு முடிவு கட்டப்படும்” என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். மாவட்ட அவைத் தலைவர் திருவிக, முன்னாள் நகர தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x