மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.10.30 கோடியில் அமைகிறது பிரம்மாண்ட வெங்காய மார்க்கெட்!


மதுரை: மதுரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கீழ மாரட் வீதி வெங்காய மார்க்கெட்டை இடமாற்றுவதற்காக மாட்டுத்தாவணியில் 10.3 கோடியில் 79 கடைகள் கடைகள் கொண்ட பிரம்மாண்ட மார்க்கெட் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான வெங்காய சந்தைகளில் மதுரை கீழமாரட் வீதி வெங்காய மார்க்கெட் முக்கியத்தும் வாய்ந்தது. 100 ஆண்டிற்கு மேலாக இப்பகுதியில் இந்த மார்க்கெட் செயல்படுகிறது. தினமும், 200 டன் வெங்காயம் இங்கு விற்பனையாகிறது. இந்த மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம், திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து விற்பனைக்காக வெங்காயம் வருகிறது.

பெரிய வெங்காயம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து வருகின்றன. ஒரு நாளைக்கு 250 சின்ன வெங்காயமும், 250 டன் பெரிய வெங்காயமும் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் இரவு முழுவதும் விடிய, விடிய விற்பனை நடக்கும். காலை முதல் சில்லறை வியாபாரம் களைகட்டும். இந்த வெங்காயம் மார்க்கெட், சிம்மக்கல் பழ மார்க்கெட், பழைய சென்டரல் மார்க்கெட் போன்ற மார்க்கெட்டுகளும் இரவு, பகலாக செயல்பட்டதாலே மதுரைக்கு தூங்கா நகரம் பெயர் வந்தது.

இந்நிலையில் மாநகரப் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்தால், கடந்த காலத்தை போல், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு, சரக்கு வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. மேலும், சரக்கு வாகனங்கள் வந்தால், மீனாட்சிம்மன் கோயில் வீதிகளில் போக்குரவத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. அதனால், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்தனர். அதனால், கோயிலை சுற்றியுள்ள ஒவ்வொரு மார்க்கெட்டும், புறநகர் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தற்போது கீழ மாரட் வீதி வெங்காய மார்க்கெட், மாட்டுத் தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்காக, இப்பகுதியில் ரூ.10.30 கோடியில் 79 கடைகள் கொண்ட பிரம்மாண்ட வெங்காய மார்க்கெட் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. ஓரளவு பணிகள் முடிந்தநிலையில், விரைவில் இந்த வெங்காயம் மார்க்கெட் திறக்கப்பட உள்ளது. கீழ மாரட் வீதியில் இருந்து வெங்காய மார்க்கெட் இடம்பெயர்ந்து மாட்டுத்தாவணி வந்துவிட்டால், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்து போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.

x