கரூர்: அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.5.78 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், எம்எல்ஏ-க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், ரூ.5.78 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்து மேடையில் 70 பயனாளிகளுக்கு வழங்கினார். இவ்விழாவில் 361 பயனாளிகள் கலந்து கொண்டனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு அந்தந்த பகுதிகளில் உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, அம்பேத்கர் உருவப்படத்திற்கு ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், தாட்கோ மேலாளர் முருகவேல் வரவேற்றார்.
மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 350 பேருக்கு ரூ.1.75 கோடியில் வீட்டு மனை, 156 பேருக்கு ரூ.49.75 லட்சம் கடனுதவி, 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள், தையற்கூலி, ரெயின் கோட், நலவாரிய அட்டை, 94 பேருக்கு ரூ.32.80 வங்கிக் கடன், 50 பேருக்கு குடும்ப அட்டை.
46 பேருக்கு ரூ.3.27 லட்சத்தில் இலவச தையல் இயந்திரம், 31 பேருக்கு ரூ.21.49 லட்சம் பயிர்க் கடன், 21 பேருக்கு ரூ.8.18 நிதியுதவி, 10 பேருக்கு சுயதொழில் தொடங்க ரூ.1.81 கோடி கடன், 5 பேருக்கு முன்னோடி வங்கிக் கடன் ரூ.20.83 லட்சம், 5 பேருக்கு ரூ.13.38 லட்சத்தில் பவர் டில்லர் வழங்குதல். 2 பேருக்கு மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.65 லட்சம், 10 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.56,000, 3 பேருக்கு மகப்பேறு உதவித் தொகை ரூ.6,000, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் வாரிசுக்கு அரசு வேலை.
ஒரு குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்தில் வீட்டுமனை, விபத்து இறப்பு நிவாரணத் தொகை ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், இயற்கை மரணம் நிவாரணத் தொகை ஒரு குடும்பத்திற்கு ரூ.25,000, திருமண உதவித்தொகை ஒருவருக்கு ரூ.3,000 என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.