வீட்டில் உள்ள சேற்றை வாரி போட கூட ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது: காங்கிரஸ் தலைவர் ஆவேசம்


புதுச்சேரி: வீட்டில் உள்ள சேற்றை வாரி போடக் கூட ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது: ''ஃபெஞ்சல் புயல் போன்ற ஒன்றை சந்தித்தது இல்லை. எந்த இடத்திலும் தண்ணீர் இல்லை என்று சொல்ல முடியாது. குடிசை பகுதிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த புயல் பாதிப்பில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அரசை நம்பி இருந்தால் எதுவும் நடக்காது. முதல்வர் ரங்கசாமி ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஆனால் வீட்டில் உள்ள சேற்றை வாரி போடுவதற்கு கூட ரூ.5 ஆயிரம் போதாது. தண்ணீர் புகுந்த இடத்தில் இருப்பவர்களுக்கும் ரூ.5 ஆயிரம், அவர் வசிக்கும் இடங்கள் உள்ளிட்ட தண்ணீரே வராத இடத்தில் இருப்பவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் என்பது எப்படி? நியாயமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பிள்ளைகளின் புத்தகங்கள் அனைத்தும் நனைந்து உள்ளன. எனவே அரசு அந்தந்த பகுதிகளிலேயே முகாம் அமைத்து மக்களுக்கு உடனே ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாங்கள் சென்று பார்த்த போது அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவும் இல்லை. எங்களை கண்டுகொள்ளவும் இல்லை என்று மக்கள் கூறினர். எனவே அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடத்துக்கு அனுப்ப வேண்டும். முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் ரூ.600 கோடி கேட்டுள்ளார். அதை மத்திய அரசு கொடுக்காது. ஆனால் மக்களை ஏமாற்ற முதல்வர் கேட்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் யார் வீட்டிலும் தற்போது அரிசி இல்லை. ஆகவே அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு சரியாக உணவு கூட வழங்கப்படவில்லை. இது போன்ற செயல்களை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸார் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

x