இடைநின்றவர்கள், பள்ளியில் சேராதவர்கள் என 23 மாணவ, மாணவிகள் கண்டறிந்து மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சேர்ப்பு


கோவை: இடைநின்றவர்கள், பள்ளியில் சேராதவர்கள் என 23 மாணவ, மாணவிகள் கண்டறிந்து, கரட்டுமேடு கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநகரில் செயல்பட்டு வருகின்றன. இதில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த கல்வி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல், இடையில் பள்ளிக்கு வராமல் நிற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட கல்வி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாணவ, மாணவிகளின் வருகை சராசரி மிகக் குறைவாக உள்ள, அதாவது இடைநிற்றல் மாணவர்கள் உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் தெரிவிக்கப்பட்டது.

அப்பட்டியலின்படி, குறிச்சியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 9 மாணவர்கள் பள்ளிக்கு சரிவர வராமல் இருந்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரித்து, இடைநின்ற 9 மாணவர்களின் வீட்டு முகவரியை பெற்றனர். தொடர்ந்து ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், கடந்த 29-ம் தேதி, தொடர்புடைய மாணவர்கள் இடங்களில் மாநகராட்சி கந்தசாமி நகர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், தொடர்புடைய மாணவர்கள் குறிச்சியிலிருந்து கந்தசாமி நகர் பகுதிக்கு குடிபெயர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து கந்தசாமி நகரில் சென்று மாநகராட்சி கல்விக் குழுவினர் விசாரித்தனர். அங்கு மேற்கண்ட 9 மாணவ, மாணவிகளை சந்தித்து ஏன் பள்ளிக்கு சரிவர வருவதில்லை என விசாரிக்கச் சென்ற போது, மேலும், 14 மாணவ, மாணவிகள் பள்ளியில் சேராமல் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மேற்கண்ட பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை அறிய கள ஆய்வு நடத்தப்பட்டது. நாங்கள் தேடிப் போனது 9 மாணவ, மாணவிகளின் நிலையை அறிய. ஆனால், அங்கு பள்ளிக்கு செல்லாமல் மேலும், 14 பேர் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, மேற்கண்ட 23 மாணவ, மாணவிகள், அவர்களது குடும்பத்தினரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், அவர்களின் எதிர்கால நலன் கருதி, மேற்கண்ட 23 மாணவ, மாணவிகளையும் வகுப்புகளின் அடிப்படையில், சரவணம்பட்டி அருகேயுள்ள கரட்டுமேட்டில் உள்ள மாநகராட்சி கந்தசாமி நகர் ஆரம்பப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை சேர்க்கப்பட்டனர்'' என்றனர்.

x