பல்லாவரம்: பல்லாவரம் கன்டோன்மென்ட், 6-வது வார்டு, மலைமேடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாளும், தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டு, காமராஜர் நகரில் 3 நாட்களுக்கு ஒரு முறையும் பாலாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் மலைமேடு பகுதி, காமராஜர் நகருக்கு, 3 நாட்களுக்கு முன்னர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாட்களை காட்டிலும் தற்போது விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் கழிவு நீர் கலந்து நிறம் மாறிய நிலையில் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அப்பகுதிகளை சேர்ந்த பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அங்கு, சிலர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். சிலர் தனியார் மருத்துவமனையிலும், சென்னையில் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று காலை பலர் இதே பாதிப்புகளால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 18 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பல்லாவரம் காமராஜர் நகரை சேர்ந்த திருவேதி (56), என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கன்டோன்மென்ட் பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகனரங்கம் (47) நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி, மகன், மகன் உள்ளனர்.
தொடர்ந்து தாம்பரம் அரசு மருத்துவமனையில் 19 பேரும், பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிகிறது. இதையடுத்து தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி, செங்கை ஆட்சியர் அருண்ராஜ், மாநகராட்சி அதிகாரிகள், கன்டோன்மென்ட் அதிகாரிகள் நேரில் சென்று விவரத்தை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், குடிநீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக கிங்இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே செங்கை மேற்கு, சென்னை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெருங்குடி கே.பி. கந்தன், பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.