கர்​நாடக பாஜக பிரமுகர் கொலை வழக்கு: சென்னை​யில் என்ஐஏ திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன


சென்னை: கர்நாடக மாநில பாஜக பிரமுகர் கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னையில் 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் அங்கு பாஜக மாவட்ட இளைஞரணியில் முக்கிய பொறுப்பை வகித்தார். இந்நிலையில், கடந்த 2022 ஜூலை 26-ம் தேதி இரவு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியது.

இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. பிரவீன் நெட்டாரு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகப்பட்ட அம்மாநில அரசு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்தது. இந்த வழக்கில் என்ஐஏ பல்வேறு கோணங்களில் துப்பு துலக்கி அடுத்தடுத்து பலரை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை வந்த கர்நாடகா மாநில என்ஐஏ அதிகாரிகள் திருவொற்றியூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வசிக்கும் முகமது ஆசிம் என்பவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை பிரவீன் நெட்டாரு கொலை தொடர்பாக நடைபெற்றது என கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் சோதனை நடைபெற்றுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் பெண் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி முகமது ஆசிமை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த முகமது ஆசிம், சென்னை தங்க சாலைப் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக வெளியூர் சென்று இருந்த முகமது ஆசிம் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்க சாலையில் உள்ள விலாசத்தை வைத்து அவரது வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அவர் வீடு காலி செய்து திருவொற்றியூருக்கு மாறி இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை திருவொற்றியூர் பகுதியில் சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

x