சென்னை: இன்று நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்காதது குறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: டிச.6-ம் தேதி (இன்று) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் அவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
2001-ம் ஆண்டு முதன்முறையாக திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குப் போனவர் திருமாவளவன். 2003-ம் ஆண்டு பதவியை அவர் ராஜினாமா செய்தார். பதவிதான் வேண்டுமென்றால் திமுக தலைவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்திருக்கலாம். ஆனால், கொள்கை முக்கியமெனப் பதவியைத் துறந்தார்.
அப்படிப்பட்ட கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவர் திருமாவளவன். சமரச ‘பாயாசம்’ அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என அவர் கூறவில்லை. அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும், பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையை பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார்.
ஆனால், திருமாவளவன் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது அவரை மட்டுமல்ல, அம்பேத்கரையும் அவமதிப்பதாகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கரும், திருமாவளவனும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களை பொட்டலம் கட்ட எவராலும் முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.