ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு: நினைவிடத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் அஞ்சலி


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவிதினகரன், சசிகலா ஆகியோர், ‘தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவோம்’ என நேற்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதைசெலுத்தினார். அதைத் தொடர்ந்து, அவரது தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும், ‘ஜெயலலிதா காட்டிய வழியில் தொடர்ந்து பணியாற்றுவோம். தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி, மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், செம்மலை, கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து, மலர்
தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ‘ஜெயலலிதாவை மீண்டும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக்குவோம். திமுக அரசை அகற்றி, ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவருவோம்’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் ‘தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி, ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்’ என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர், ‘தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் இணைந்து ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம்’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழக தேர்தல் வரலாற்றிலேயே 234 தொகுதிகளிலும் தனித்து தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி, அதில் வெற்றியும் கண்ட ஒரே ஆளுமை ஜெயலலிதா. தமிழக நலன் மற்றும் பெற வேண்டிய உரிமைகளை மத்திய அரசிடம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத சமரசமற்ற இரும்பு பெண்மணி ஜெயலலிதா’ என கூறியுள்ளார்.

x