கூடலூர்: பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கட்டுமானப் பொருட்களை புதன்கிழமை (டிச.4) கொண்டு சென்றனர். வல்லக்கடவு எனும் இடத்தில் கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் இந்த இரண்டு லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கேரள நீர்வளத்துறையிடம் அனுமதி பெற்றே கொண்டு செல்லப்படுகிறது என்று தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள், ‘எங்களுக்கு இது குறித்த தகவல் வரவில்லை. ஆகவே அனுமதிக்கமாட்டோம்’ என்றனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் இந்த லாரிகள் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் நிர்வாகிகள் மகேஸ்வரன், அறிவழகன் உள்ளிட்ட பலரும் தமிழக - கேரள எல்லையான லோயர் கேம்ப்-பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கேரள அரசிடம் பேசி வருகிறார்கள். நாளை (டிச.6) இப்பொருட்களை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது” என்றனர்.