சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 9 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் விழுப்புரத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ வரை கனமழை கொட்டியது.
அதி கனமழை காரணமாக கடும் மழைப்பொழிவினை சந்தித்த விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மிக கடுமையாக பாதிக்கப்பட்ட் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்த நிலையில் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 9 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.