புதுச்சேரி: ஃபெஞசல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முதல்கட்டமாக ரூ.600 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு முதல்வர் ரங்கசாமி இன்று அனுப்பிய கடிதத்தில்: ‘புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த நவம்பர் 30ம் தேதி, டிசம்பர் 1ம் தேதிகளில் "ஃபெஞ்சல்" புயல் காரணமாக இடைவிடாத மழை பெய்தது. அத்துடன் சாத்தனூர், வீடுர் அணைகள் திறக்கப்பட்டன. ஃபெஞ்சல் புயலின் போது புதுச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்து வரும் தமிழகத்தின் உள் பகுதிகளில் இருந்து புதுச்சேரியின் ஆறுகள் மற்றும் வாய்க் கால்களில் மழைநீர் கரைபுரண்டோடின. குறிப்பாக சாத்தனூர் அணையில் இருந்து 2.12 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்கனவே பெய்து வரும் மழைநீருடன் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பாகூர் தாலுகா கிராமங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதுச்சேரி பகுதியில் உள்ள ஆற்றுப்படுகை கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கின.
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அச்சத்தில் உள்ளனர். புதுச்சேரி மற்றும் பாகூர் தாலுகாப் பகுதிகள் வெள்ளம் மற்றும் நீர் தேக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இம்மழையால் 4,168 வீடுகள் பகுதியாகவும், 154 வீடுகள் அதிகளவிலும், 315 குடிசை வீடுகளும் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 9981.72 ஹெக்டேர் விவசாய பயிர்கள் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளன. 14,315 மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், மீனவர்களுக்கு சொந்தமான 975 படகுகள் சேதம் அடைந்தன. தோராயமாக 500 மரங்கள் விழுந்துள்ளன. 1,596 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. 52 பள்ளிகள், கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன.
புதுச்சேரியில் ஆண்டுக்கு சராசரி மழையளவு 1,399 மி.மீ. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1,688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள விரும்பினோம். இந்த நிர்வாகத்தின் அந்தந்த துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை துறை வாரியாக தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன. சேதங்களுக்கான தற்காலிகச் செலவு, சம்பந்தப்பட்ட துறைகளால் மொத்தம் ரூ.614.88 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சில துறைகள் விதிமுறைப்படி சேத செலவை குறைத்துள்ளன. அதனால் சேதங்களின் உண்ணையான மதிப்பு அதிகமாக உள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதிய இருப்பு இல்லாததால் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள மேற்படி தொகை உடனடியாக தேவைப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில், வடிகால் கால்வாய்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இடைவிடாது பெய்த கனமழையால், பெரும்பாலான உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரருக்கும் ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளேன். எனவே, இதற்காக 177 கோடி ரூபாய் தேவைப் படுகிறது. புதுச்சேரியின் கிராமப் பகுதிகள் முழுவதையும் பார்வையிட்டேன். பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளதைக் கண்டேன். நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகள் அமைப்பதற்கு ரூ.427.00 கோடியை அனுமதிக்க வேண்டும். அவசரத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கான தற்காலிக கோரிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,
மேலும் சேதங்கள் குறித்த விரிவான அறிக்கை உரிய காலத்தில் பிரதமருக்கு புதுச்சேரி அரசால் சமர்ப்பிக்கப்படும். எனவே, கனமழையால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு உடனடியாக மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கான நிதியை புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும். முதற்கட்டமாக, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கும் ரூ.600 கோடி வழங்க வேண்டும்’ என்று முதல்வர் ரங்கசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.