மதுரையில் முதல் முறையாக சைக்கிளிங் டிராக்: சுற்றுலா தலமாக மாறும் வண்டியூர் கண்மாய் சுந்தரம் பூங்கா


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய் சுந்தரம் பூங்காவில், ரூ.50 கோடியில் அமையும் சுற்றுலா ஸ்தலத்தில் நடைப்பயிற்சி வருவோர் உடல் ஆரோக்கியத்திற்காக சைக்கிளிங் செல்வதற்காக பூங்கா வளாகத்தில் முதல் முறையாக இலவச சைக்கிள்களுடன் கூடிய ‘சைக்கிள் டிராக்’ அமைப்பது, பொதுமக்களை கவர்ந்துள்ளது.

மதுரை மாநகரின் மையத்தில் கடல்போல் அமைந்துள்ள வண்டியூர் கண்மாய் 550 ஏக்கரில் உள்ளது. இந்த கண்மாயை ஆழப்படுத்தி பராமரிக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்காததால் கண்மாய் சுருங்கி கொண்டே வந்தது. இதையடுத்து, தற்போது மாநகராட்சி சார்பில் கண்மாயை அழப்படுத்தி அதன் கரையோரத்தில் உள்ள சுந்தரம் பூங்காவில், ரூ.50 கோடியில் உள்ளூர் மக்களுடைய முக்கிய பொழுதுப்போக்கு மையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கண்மாய் கரையைப் பலப்படுத்துதல், படகு சவாரி, கண்மாய் மேற்கு, வடக்கு பகுதி கரையோரம் சைக்கிள் பாதை, நடை பயிற்சி பாதை, யோகா, தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள், முதியோர், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுப் பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த பட்டியலில் இடம்பெறாத கூடுதல் பொழுதுப்போக்கு வசதியாக, பூங்கா வளாகத்தில் 3 கி.மீ., தொலைவிற்கு ‘சைக்கிளிங் டிராக்’ அமைக்கப்படுகிறது. நடைப்பயிற்சிக்கு வருவோர், இந்த இங்குள்ள சைக்கிளிங் மையத்தில் உள்ள சைக்கிள்களை எடுத்து இலவசமாக, சைக்கிள் டிராக்கில் ஓட்டிச் செல்லலாம். இதற்காக, சைக்கிளிங் மையத்தில் 20 சைக்கிகள் நிறுத்தப்பட்டிருக்கும்.

வீட்டில் இருந்தே சைக்கிள் கொண்டு வருகிறவர்களும், இங்கே இந்த சைக்கிள் டிராக்கில் ஓட்டிச் செல்லலாம். சுந்தரம் பூங்கா, நுழைவு வாயிலில் தொடங்கும் இந்த சைக்கிள் டிராக், அண்ணா நகர் பக்கம் ஒரு கி.மீ., மாட்டுத்தாவணி பக்கம் 2 கி.மீ., செல்கிறது. கண்மாய் கரையோரும், மரத்தடியில் நீர்நிலையை பார்த்து ரசித்தவாறு இயற்கை சூழலில் ஓட்டிச் செல்லலாம்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”வெறும் பொழுதுப்போக்கு மையமாக மட்டுமே இந்த சுற்றுலா தளம் அமையாமல், மக்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் பொழுதுப்போக்கிற்கு, சினிமா தியேட்டர்கள், கோயில்களை விட்டால் வேறு ஒன்றுமே இல்லை. நடைப்பயிற்சி செல்வோருக்கும் போதுமான நடைப்பயிற்சி பாதை இல்லாமல் சாலையோரம் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு 3 கி.மீ., தொலைவிற்கு நடைப்பயிற்சி பாதையும் அமைக்கப் பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறினர்.

x