மதுரை: கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை ஆ.தெக்கூரைச் சேர்ந்த சிவன் கோயில் நிர்வாகி தணிகாசலம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: ‘சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூர் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. கோயிலை நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். கோயில் நகரத்தார் சமுதாயத்துக்கு பாத்தியப் பட்டது என அறநிலையத் துறை 1982ல் அறிவித்தது. கோயில் எதிரே அமைந்துள்ள ஊரணியை 48 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் சிவன் கோயில் நிர்வாகத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மீனாட்சி சிவன் கோயில் எங்களுக்கு பாத்தியப்பட்டது, கோயிலில் நடைபெறும் திருமணம், காது குத்து போன்ற வைபவங்களின் வருமானத்தில் உரிமை கோரி திருப்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் கோயில் நிர்வாகம் விளக்கம் அளிக்க உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கோவிந்தராஜ், திலகவதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கும் எண்ணத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், சட்டத்தை தவறாக பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் நீதிமன்றத்துக்கு கோயில் நிர்வாகம் குறித்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை. கோயில் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.