கோவை: கோவை - அபுதாபி இடையே இயக்கப்பட்டு வரும் விமான சேவை தொடரும் என்றும், திருச்சியில் வழங்கப்பட்டு வந்த சேவை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் தினமும் சராசரியாக 30 முதல் 32 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. 10 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை - அபுதாபி இடையே வழங்கப்பட்டு வரும் சேவை நிறுத்தப்படுவதாக பயணிகள் சிலர் சந்தேகம் தெரிவித்த நிலையில், விமான நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: "கோவை - அபுதாபி இடையே தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் சேவை வழங்கப்படுகிறது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால் இந்த சேவை தொடரும். திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வழங்கப்பட்டு வந்த சேவை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் குழப்பம் அடைய தேவையில்லை. அதேபோல் கோவையில் உள்நாட்டு பிரிவில் சென்னைக்கு மேலும் ஒரு சேவை நவம்பர் 30ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கோவை - சென்னை இடையே தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது" என்று அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறியதாவது: "கோவை - அபுதாபி இடையே வழங்கப்படும் நேரடி விமான சேவை பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கிறது. அபுதாபியில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 9.25 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் காலை 11 மணிக்கு கோவையில் புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அபுதாபி சென்றடைகிறது.
கோவையில் இருந்து கொச்சினுக்கு காரில் சென்று துபாய் செல்லும் பயண நேரம், செலவுடன் ஒப்பிடுகையில் அபுதாபி சென்று அங்கிருந்து துபாய்க்கு ஒரு மணி நேரத்தில் காரில் பயணித்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயன் அளிக்கிறது. எனவே பயணிகள் பலர் இந்த நடைமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் மட்டுமி்ன்றி கேரள மாநிலத்தின் பாலக்காடு, மன்னார்காடு, ஒற்றப்பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள பயணிகள் பலரும் கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வழங்கப்படும் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
விடுமுறை, பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களி்ல் இந்த விமான சேவைக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். எனவே கோவை - அபுதாபி இடையே தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்படும் சேவை, தினமும் வழங்கும் வகையில் விமான நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சதீஷ் கூறினார்.