சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழையின் காரணமாக கடுமையான பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணத்துக்கான டோக்கன் கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
அதி கனமழையின் காரணமாக கடுமையான பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நிவாரண தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் இன்று காலை முதல் (டிசம்பர்.5) ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து திருக்கோவிலூரில் உள்ள 159 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணத்தை இன்று அமைச்சர் பொன்முடி வழங்கினார். டோக்கன் விநியோகிக்கப்பட்டு இரண்டு முதல் மூன்று நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த வருவாய்துறை செயலாளர் அமுதா அறிவித்துள்ளார்.
மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வெள்ள சேதங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கையளிக்குமாறு தமிழக அரசு கேட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்தபின்னர் அம்மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.