புதுச்சேரி: கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "ஃபெஞ்சல் புயல் மற்றும் பெருமழையால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல், கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட உடன் உடனடியாக நிவாரணம் அறிவித்தமைக்கும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு குடும்பத்துக்கு ரூ.2000 மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது.
ஆனால், புதுச்சேரி ஆளும் முதல்வர் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.5000 அறிவித்துள்ளதுக்கும் அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் ஆளும் திமுக அரசு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இரவில் வீடூர் மற்றும் சாத்தனூர் அணைகளில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீரை திறந்துவிட்டது. இதனால் தென்பெண்ணையாறு, சங்கராபரணியாறு, மலட்டாறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ள நீரானது ஆற்றில் கரையோர பகுதிகளில் உள்ள புதுச்சேரி மாநில கிராமப் பகுதிகளுக்குள் உட்புகுந்ததால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளநீரில் முழ்கியது. மேலும் நகரப் பகுதியில் உள்ள பிரதான கழிவுநீர் வாய்க்காலான உப்பனாறு வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த வாய்க்கால் உடைந்து உருளையன்பேட்டை, காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் வசிக்கும் வீடுகளிலும் கழிவு நீர் உட்புகுந்தது.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டம், பிரான்சுவா தோட்டம், ஆட்டுபட்டு, ரோடியர் பேட், காளியம்மன் தோப்பு, பெருமாள் ராஜா தோட்டம், எல்லையம்மன் கோவில் தோட்டம், தாவுதுபேட்டை, திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் 5 அடி உயரத்துக்கு கழிவுநீர் உட்புகுந்ததால் வீட்டில் உள்ள பிரிட்ஜ், கட்டில், மெத்தை, வாஷிங்மிஷன் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்தன. இதனால், அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளை முழுமையாக இழந்து நிர்கதியாய் தவித்து வருகின்றனர்.
எனவே முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க வேண்டும். முழுவதுமாக வீடு சேதமடைந்த குடும்பங்களுக்கு ரூ.25,000 கொடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு வர்த்தக, வியாபார நிறுவனங்கள் உள்ளன. எனவே புயல் நிவாரண நிதியை அந்தந்த வர்த்தக, வியாபார நிறுவனங்களில் இருந்து புதுச்சேரி அரசு பெற்று ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.