சென்னை: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஓரிரு இடங்களில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 5-ம் தேதி (இன்று) முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் பனிமூட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருச்சி மாவட்டம் துவாக்குடியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கேத்தி, அழகரை எஸ்டேட், கடலூர் மாவட்டம் கீழச்செருவையில் 3 செ.மீ. நீலகிரி மாவட்டம் கின்னக்கோரை, கோத்தகிரி, உதகை, குந்தா பாலம், கடலூர் மாவட்டம் தொழுதூர், பெரம்பலூர் மாவட்டம் தழுதலை, அகரம் சீகூர், திருவாரூர் மாவட்டம் குடவாசல், திருச்சி மாவட்டம் தென்பரநாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.