கோவை: வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து, கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வங்கதேச உரிமை மீட்புக் குழு சார்பில், கோவை சிவானந்தா காலனியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வங்க தேசத்தில் புதிய அரசு அமைந்தவுடன் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காளி கோயில், இஸ்கான் கோயில் போன்றவை எரிக்கப்பட்டுள்ளன. இந்துகளின் வர்த்தக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்து மக்களை ஒருங்கிணைத்த இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மயி கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வழக்கறிஞர், நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழக அரசு இந்து விரோத அரசாக செயல்படுகிறது. வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு சர்வதேச அளவில் ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்திய பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, ஹெச்.ராஜா உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.