மதுரை: நெடுஞ்சாலைத் துறையில் பின்பற்றப்படும் `பேக்கேஜ் டெண்டர்' முறையால் சிறிய ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்படும் நிலையில், அதை தொடர்வது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார், ரங்கராஜன் உட்பட 8 முதல் நிலை ஒப்பந்தக்காரர்கள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை கண்காணிப்பாளர் சார்பில் ரூ.75 கோடியில் 18 சாலைப் பணிகள், நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் திட்டத்தில் ரூ.85 கோடியில் 31 சாலைப் பணிகள் என ரூ.160 கோடிக்கு பேக்கேஜ் டெண்டர் முறையில் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 50 முதல் நிலை ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர். பேக்கேஜ் முறையால் டெண்டரில் 10 ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சூழல் உள்ளது. இதனால் போட்டிகள் இல்லாமல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். வேலைகள் விரைவில் முடியாது. தரமாகவும் இருக்காது.
பொதுப்பணித் துறையில் பேக்கேஜ் டெண்டர் முறை 2021-ல் ரத்து செய்யப்பட்டது. பேக்கேஜ் டெண்டரால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.55 ஆயிரம் கூடுதல் செலவாகும். எனினும், நெடுஞ்சாலைத் துறையில் பேக்கேஜ் டெண்டர் முறை தொடர்வது துரதிர்ஷ்டவசமானது. திருச்சி, தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறை பணிகள் தனித்தனியாகவே டெண்டர் விடப்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலைத் துறையில் பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், "அரசு சாலைப் பணிகளை மொத்தமாக சேர்த்து பேக்கேஜ் டெண்டர் விட்டால், சிறிய அளவிலான ஒப்பந்ததாரர்களின் நிலை என்னவாகும்? அவர்கள் எப்படி வளர்ச்சியடைய முடியும்? பேக்கேஜ் டெண்டர் முறை பெரியளவிலான ஒப்பந்ததாரர்கள் மட்டும் பயனடையும் வகையில் உள்ளது" என்று தெரிவித்து, தீர்ப்பை தள்ளிவைத்தனர்.