பழநி: பழநி முருகன் கோயில் நவபாஷான மூலவர் சிலை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு உறுதித்தன்மையுடன் இருக்கும் என்று மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழு தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான பொங்கியப்பன் கூறினார்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷானத்தால் செய்யப்பட்டது. போகர் சித்தர் இந்த மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவர் சிலையைப் பாதுகாப்பது, பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி, ஆதீனங்கள், ஸ்தபதிகள் அடங்கிய 15 பேர் கொண்ட மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது.
இந்தக் குழுவினர் அவ்வப்போது மூலவர் சிலையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவினர் மலைக் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கருவறைக்குள் சென்று, மூலவர் சிலையின் உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். முன்னதாக, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
ஆய்வின்போது, குன்றக்குடி பொன்னம்பல தேசிகர், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கோவை கவுமாரமடம் குமரகுருபர சுவாமிகள், முன்னாள் இணை ஆணையர் நடராஜன், இணை ஆணையர் மாரிமுத்து, தக்கார் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆய்வு காரணமாக 3 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆய்வுக்கு பின்னர் குழுத் தலைவர் பொங்கியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மூலவர் சிலை தொடர்பாக, ஐஐடி பேராசிரியர்களும் ஆய்வு செய்தனர். அவர்கள் தரும் அறிக்கையின்படி, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு சிலை உறுதித்தன்மையுடன் இருக்கும். சிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.