தஞ்சை: திருவிடைமருதூர் வட்டம் மணலூர் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் 5-ம் தேதி நடைபெறுவதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோயில் விமான கலசம் பிரதிஷ்டை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற, மதுரை ஆதீன 293-வது குருகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியது, “பாரத நாடு ஆன்மிக பூமி. ஆன்மிகம் தான் உலகை ஒருங்கிணைக்கிறது. தமிழகத்தில் தற்போது பக்தி அதிகமாக உள்ளது. சபரிமலைக்கு தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் என பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்கிறார்கள். சபரிமலை யாத்திரை சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்தப் பகுதியில் உள்ள நவக்கிரக கோயில்கள் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் தரிசனம் செய்ய தமிழகம் வருகின்றனர். இப்படியாக மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக கோயில்கள் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களிடம் ஆன்மிகம் அதிகரித்துள்ளது. அது இன்னும் சிறப்பு பெற வேண்டும். பெற்றோர்கள் கோயிலுக்கு செல்லும் போது, தங்களது பிள்ளைகளை அழைத்து சென்று ஆன்மிகத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியாவை கண்டு உலக நாடுகள் அனைத்தும் மிரளுகிறது. வங்க தேசத்தில் நிகழும் சம்பவங்கள் வருந்தப்படும் அளவுக்கு உள்ளது. நமது நாட்டில் எல்லா மதத்தையும் ஒற்றுமையாக நினைப்பது, நமது இந்து சமயம் தான் சபரிமலை போன்ற கோயில்களில் வழிபாட்டில் மேற்கொள்ளப்படும் சம்பிரதாயம் மிகவும் அவசியமான ஒன்று. சமய வழிப்பாட்டில் சம்பிரதாயம் இருப்பது நல்லது தான் அது காப்பாற்றப்பட வேண்டும்” என்று மதுரை ஆதீனம் கூறினார்.
இதில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.