டிச.6-ஐ முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரம்


கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதியை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு சாமி கும்பிட பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரை பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக வெளியூர்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் இரவு வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

படகு மூலமும் கடல் வழியாக போலீசார் நவீன படகில் சென்று சோதனை நடத்தினர். களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான சோதனை சாவடிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். கடலோர சோதனை சாவடிகளிலும் சோதனை நடந்து வருகிறது.

x