ரயில்வே தொழிற்சங்க தேர்தலையொட்டி மதுரையில் இரு தரப்பினர் மோதல் - சேர்கள் உடைப்பு 


மதுரை: மதுரையில் ரயில்வே தொழிற்சங்க தேர்தலையொட்டி, இரு சங்கங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேர்கள் உடைக்கப்பட்ட நிலையில், போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அகில இந்தியளவில் ரயில்வே சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் டிச.4 முதல் 6-ம் தேதி வரையிலும் 3 நாள் நடக்கிறது. தேர்தல் இன்று (டிச.4) தொடங்கிய நிலையில், மதுரையில் ரயில்வே மனமகிழ் மன்றம், ரயில்வே பள்ளி, ஆபிஸ் ரெஸ்ட் ரூம் ஆகிய மூன்று இடங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் நாளான இன்று தேர்தல் நடக்கும் பகுதியில் ரயில்வே தொழிற் சங்க நிர்வாகிகள் தவிர, வெளி நபர்கள் யாரும் அப்பகுதியில் கூடக்கூடாது என்பது விதிமுறை உள்ளது. இதன்படி, அப்பகுதியில் எஸ்ஆர்எம்யூ, டிஆர்இயூ உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் திரண்டு இருந்தனர்.

இருப்பினும், டிஆர்இயூ தொழிற்சங்கம் வெளியில் இருந்து சிஐடியூ, ஜனநாயகர் மாதர் சங்கத்தினரை அழைத்து வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இரு தொழிற்சங்கங்கத்தினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த ஓரிரு பெண்களை கீழேதள்ளி, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், நாற்காலிகளை சேதப்படுத்தியாகவும் கூறப்படுகிறது. தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இச்சம்பவத்தை நடத்தியதாக எஸ்ஆர்எம்யூ மீது, டிஆர்இயூ குற்றம்சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும், தேர்தல் நேரத்தில் இது போன்ற சம்பவத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஆர்இயூ மதுரை கோட்ட இணைச்.செயலாளர் ஆர்.சங்கரநாராயணன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எஸ்ஆர்எம்யூ கோட்ட உதவி செயலாளர் ராம்குமார் கூறுகையில், “தேர்தல் விதிமுறையை மீறி டிஆர்யூஇ தொழிற்சங்கத்தினர் கூட்டத்தை அதிகரித்துக் காட்டும் நோக்கில் சிஐடியூ, ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெளியில் இருந்து அழைத்து வந்தனர். தேர்தல் விதிமுறைக்கு எதிரான இச்செயலை நாங்கள் கண்டித்தோமே தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை” என்றார்.

இந்நிலையில், மதுரையில் ரயில்வே மனமகிழ் மன்றம், ரயில்வே பள்ளி, ஆபிஸ் ரெஸ்ட் ரூம் ஆகிய மூன்று இடங்களில் இன்று (டிச.,5), நாளை டிச - 6ம் தேதி ரயில்வே பள்ளியில் நடக்கும் தேர்லையொட்டி, போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என, ரயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x