தூத்துக்குடி: வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்புகளைச் சேர்ந்த 255 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக மற்றும் இந்து கோயில்கள் மீதான வன்முறை தாக்குதல்களைக் கண்டித்தும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (டிச.4) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.இசக்கிமுத்துக்குமார் தலைமை வகித்தார்.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா, மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மன்னார்குடி செண்டலங்கார சென்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்னகேசவன், ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் சீத்தாராமன், சிவன் கோயில் செல்வம்பட்டர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டு வங்கதேச அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி 43 பெண்கள் உள்ளிட்ட 255 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.