காரைக்குடி: வங்கதேசத்தில் இந்துகள் தாக்கப்படுவதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்களை பேசவிடாமல் போலீஸார் ஒலிபெருக்கியைப் பறித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, மறியலிலும் ஈடுபட்டனர். காரைக்குடி ஐந்துவிளக்கு பகுதியில் வங்கதேசத்தில் இந்துகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் இன்று (டிச.4) ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அதற்கு போலீஸார் அனுமதி தரவில்லை.
இதையடுத்து அனுமதியை மீறி பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னிபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜகவினர் பேசிக் கொண்டிருந்தபோது பேச அனுமதியில்லை என்று கூறி போலீஸார் ஒலிபெருக்கியைப் பறித்தனர்.
இதனால் பாஜக, இந்து முன்னணி அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரை கண்டித்து அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியல் செய்த 20 பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.