கோவில்பட்டி: கோவில்பட்டியில் நின்று இருந்த மொபட்டுக்கு திருநெல்வேலி நகரப் போலீஸார் அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குருப்பிரியா (22). பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். கடந்த மாதம் 5ம் தேதி குருப்பிரியா பணியில் இருந்தபோது மாலை 5 மணியளவில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது இருசக்கர வாகனத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த குறுஞ்செய்தியில் இருந்த ஆன்லைன் செல்லானுக்குள் சென்று பார்த்தபோது, இருசக்கர வாகனம் அதி வேகமாக சென்றதற்கு ரூ.1000ம், 3 பேர் சென்றதற்காக ரூ.1000ம் என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதுவும், திருநெல்வேலி நகரம் பெருமாள்புரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், விபரங்களுக்கு பெருமாள்புரம் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் சாம் சுந்தரை அணுக வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குருப்பிரியா, தனது பெற்றோருடன் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை அணுகி உள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆன்லைனில் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து குருப்பிரியா குடும்பத்தினர் கூறியதாவது, "நாலாட்டின்புதூரில் இருந்து கோவில்பட்டிக்கு கூட அடிக்கடி சென்றிருக்காத தங்களது இருசக்கர வாகனத்துக்கு திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியில் சென்றதாக ரூ.2 அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது குறித்து பெருமாள்புரம் காவல் ஆய்வாளரும், திருநெல்வேலி காவல் ஆணையர் உரிய விசாரணை மேற்கொண்டு, கோவில்பட்டியில் இருந்த இருசக்கர வாகனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.