சென்னை: "வருமுன் காப்போம்" என்பதை அரசு செய்ய தவறியது ஏன் என்பது தான் மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது என சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அரசு கவனக்குறைவுடன் வானிலை அறிவிப்பை கையாண்டு, சாத்தனூர் அணையில் இருந்து சரியான முன்னறிவிப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் அதிக அளவில் நீர் வெளியேற்றியதால் தான் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பேரிழப்புக்கு ஆளாகி உள்ளனர். எந்தவொரு ஆட்சியாளர்களும் பதவியேற்ற பிறகு, ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலை குறித்த விபரங்களை முழுமையாக முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த பகுதிகளில் நீர்த் தேக்கங்கள், அணைக்கட்டுகள் உள்ளன, அவற்றின் கொள்ளளவு என்ன, அதீத கனமழையின் போது நீர்வரத்து எவ்வளவு இருக்கும், அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதிக நீரை திறந்துவிட்டால் எத்தகைய பாதிப்பளிக்கும், கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அணைகளில் பெருமழையின் போது நீர்மட்டம் குறிப்பிட்ட வரையறைக்கு மீறி உயர்ந்தால் மக்களை எவ்வாறு உடனடியாக அப்புறப்படுத்துவது என பல விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய கணிப்பு அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு மழை வெள்ள பாதிப்பின் போதும், அணை உடைந்தால் உயிர்ச்சேதங்கள் பெருகும் என்பதற்காக 1.80 லட்சம் கன அடி அளவில் நீரை ஒரே சமயத்தில் திறந்து விட்டோம் என ஆட்சியாளர்கள் தரப்பு தெரிவிப்பது நியாயமில்லை. "வருமுன் காப்போம்" என்பதை அரசு செய்ய தவறியது ஏன் என்பது தான் இங்கு மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. இன்றே முதல் நாள் என்ற அடிப்படையில், இனியாவது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்துத் துறைகளிலும் முறையாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.
முக்கியமாக மக்களின் உயிர் பாதுகாப்புக்காக, உயிர்காக்கும் நடவடிக்கையாக இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கு, தயார் நிலையில், அணைகளின் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து, முன்னறிவிப்போடு மக்களுக்கு பிரசுரம் வழங்கி அவர்கள் பகுதியில் இருந்து அப்புறப் படுத்தி பின் நீரை திறந்துவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பெருந்தலைவரின் ஆட்சிக்கு பிறகு குறிப்பிடப்படும்படி தமிழ்நாட்டில் அணைக்கட்டுகள் கட்டப்படாததும், ஒரு புறம் வறட்சி, மறுபுறம் வெள்ளம் என்ற சமமற்ற துயர நிலைக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டு கிறேன்" என்று சரத்குமார் கூறினார்.