கரூர்: உலக எய்ட்ஸ் தினமானது, நடப்பாண்டு உரிமைப் பாதையில் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. கரூரில் இன்று (டிச. 4ம் தேதி) உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம், வாகனங்களில் விழிப்புணர்வு வாசக ஒட்டுவில்லைகள் ஒட்டுதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றன.
இவ்விழிப்புணர்வு நிகழ்வினை, கரூர் ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்து ஹெச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி, மனித சங்கிலியை தொடங்கி வைத்து உறுதிமொழியை வாசித்து ஏற்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து தனியார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, விழிப்புணர்வு பாடலுடன் கூடிய நடன நிகழ்ச்சிகளை ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் லோகநாயகி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.