ஆவினுக்கு பால் வழங்குபவர்குரிய தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்திட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை 


சென்னை: ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்திட மதுரை ஆட்சியர் உத்தரவைப் பின்பற்றி அனைத்து மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் பால் கொள்முதல் தொடங்கி பால், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விநியோகம், இவை அனைத்தும் ஒருங்கிணைந்த நிர்வாகம் என ஒட்டுமொத்த நிறை, குறைகளை "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். எனும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கேற்ப (448) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து எடுத்துரைத்தும், இடித்துரைத்தும் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் மொத்த பால் குளிரூட்டும் நிலையம் நடத்துவோர் இடைத்தரகர்கள் மூலம் தனியாருக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த விலைக்கு பால் கொள்முதல் செய்து அதனை போலி தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு அனுப்புவதையும், மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களில் இருந்து மதுரை ஆவினுக்கு அனுப்பப்படும் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தும், பொய் கணக்கு எழுதியும் முறைகேடுகள் நடப்பதையும், மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களில் இருந்து மதுரை மத்திய ஆவின் பால் பண்ணைக்கு டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் பாலின் தரம், அளவில் மோசடிகள் நடைபெற்று வருவதையும், இவற்றுக்கு மாவட்ட துணைப் பதிவாளர் (பால்வளம்), சார் பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பால்வளத்துறை அதிகாரிகளும், பால் சேகரிப்பு குழு நிர்வாகிகள், விரிவாக்க அலுவலர்கள், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பொது மேலாளர் உள்ளிட்ட ஆவின் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து ஆவினுக்கும், நேர்மையான முறையில் மொத்த பால் குளிரூட்டும் நிலையங்கள் நடத்துவோருக்கும் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர், பால்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கூடுதல் முதன்மைச் செயலாளர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்), மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை ஆவின் பொது மேலாளர் உள்ளிட்டோருக்கு அதற்கான தரவுகளுடன் தொடர்ந்து மின்னஞ்சல் வாயிலாக புகார் மனு அனுப்பி வந்தது.

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தரப்பிலிருந்து நேற்றைய தினம் (03 12.2024 செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மதுரை மாவட்டத்தில் 697 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 15,798 உறுப்பினர்கள் தினசரி 1.54லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து மதுரை ஆவினுக்கு வழங்குவதாகவும், அவர்கள் வழங்கும் பாலுக்குரிய தொகை 10நாட்களுக்கு ஒருமுறையும், முதலமைச்சர் அறிவித்த பாலுக்கான ஊக்கத்தொகை லிட்டருக்கு 3.00 ரூபாய் மாதந்தோறும் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழக முதல்வரால் வழங்கப்படும் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் அனைத்தும் பயனாளிகளின் வங்கிச் சேமிப்புக் கணக்கின் மூலமாகவே வழங்கப்பட்டு வருவதால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் அனுப்பி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை மதுரை ஆவின் மூலம் வழங்கப்படும் பால் பணப்பட்டுவாடாத் தொகையை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் சேமிப்புக் கணக்கு மூலமாகவே வழங்க வேண்டும் எனவும், மதுரை மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தும் தங்களின் உறுப்பினர்களான பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடாத் தொகையினை உற்பத்தியாளர்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கின் மூலமாகவே பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வங்கி கணக்கு இல்லாத பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி சேமிப்புக் கணக்கு துவங்குவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதனை உடடினயாக களைந்து பால் உற்பத்தியாளர்கள் உடடினயாக சேமிப்புக் கணக்கு துவங்குவதற்கு மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் தொடர்புறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள மதுரை ஆவின் செயலாட்சியரான மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிக்கையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழு மனதோடு பாராட்டி வரவேற்கிறது.

ஏனெனில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் பால் பணப்பட்டுவாடா தொகை அவரவர் வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே வழங்கப்படும் போது போலி தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும், போலி உறுப்பினர்களும் களையெடுக்கப்படுவதோடு, ஆவினுக்கான பால் கொள்முதலில் நிலவும் மோசடி, முறைகேடுகள் களையப்படுவதற்கும், உண்மையான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும், பால் உற்பத்தியாளர்களும் பாதுகாக்கப்படுவதோடு, ஆவினுக்கான இழப்புகள் கணிசமாக குறைவதற்குமான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

அதே சமயம் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான பணப்பட்டுவாடா தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையை கூட்டுறவு பால் நிறுவனங்களின் முன்னோடி நிறுவனமான அமுல் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டே அமுல்படுத்தியதோடு, வங்கிக் கணக்கு இல்லாத பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் உறுப்பினர்களாக உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வங்கி கணக்கு தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தற்போது அதனை 100% வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி தினசரி 1 கோடி லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து பால் வணிகச் சந்தையில் அளப்பரிய சாதனைகள் படைத்து வரும் நிலையில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் லிட்டருக்கு 6.00 ரூபாய் ஊக்கத்தொகையை அவரவர் வங்கி கணக்கில் அம்மாநில அரசே நேரடியாக செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி சிறந்த முன்னுதாரணமாக செயல்படுத்தியும் வருகிறது.

அமுல், நந்தினி வரிசையில் தற்போது ஆவின் தாமதமாக இணைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான பணப்பட்டுவாடா தொகையை அவரவர் வங்கி கணக்கு மூலம் செலுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ள முயற்சி ஆவின் வரலாற்றில் மிகப்பெரிய மைல் கல்லாக மட்டுமின்றி ஊழல், மோசடி, முறைகேடுகள் இல்லாத கூட்டுறவு நிர்வாகத்தை கட்டமைத்து, பால் கூட்டுறவுகளின் வழிகாட்டியாகவும், வெண்மைப் புரட்சியின் தந்தையாகவும் திகழும் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் கனவை நனவாக்கும் சூழலை உருவாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பின்பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஒன்றியங்களும் அதனை கடைபிடிக்க பாலுற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குனர் & ஆவின் நிர்வாக இயக்குனர் அவர்கள் ஆணை பிறப்பித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 9189 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்து பால் உற்பத்தி செய்து ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா தொகை மற்றும் முதலமைச்சர் அறிவித்துள்ள லிட்டருக்கு 3.00 ரூபாய் ஊக்கத்தொகை இரண்டையும் பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் ஒன்றிய பொது மேலாளர்கள் உறுதி செய்து கண்டிப்புடன் கடைபிடிக்க ஆவண செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

அதே சமயம் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வழங்கும் பாலின் அளவு மற்றும் தரம் குறித்து உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்காக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் காலத்தில் மதுரை மாவட்ட ஆவின் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் மிகவும் தரம் குறைந்தவையாகவும், பழுதடைந்தால் பழுது நீக்க முடியாமல் பயன்படுத்த தகுதியற்றவையாகவும் இருந்த காரணத்தால் அவை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இன்றளவும் குப்பைகள் போல பயன்படுத்தப்படாமல் மூலையில் போடப்பட்டு வைத்திருப்பதால் பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை, அதுபோல தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பாலினை பெறும் மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலும் உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை என்பதோடு, மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் மத்திய ஆவின் பால் பண்ணைக்கு பால் ஏற்றும் போதே பாலின் அளவு மற்றும் தரம் குறித்து கணக்கிட்டு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை என்பதால் கீழிருந்து மேலே வரை பால் கொள்முதலில் மிகப்பெரிய அளவில் மோசடியும், முறைகேடுகளும் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதைப் போல அனைத்து மாவட்ட ஒன்றியங்களுக்கும் மதுரை ஆவின் ஒன்றியம் உதாரணமாக திகழ்வதால் மதுரை மாவட்டத்தை உதாரணமாக கொண்டு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்காக தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட இயந்திரங்களை ஆய்வு செய்திடவும், தரம் குறைந்த இயந்திரங்கள் கொள்முதல் செய்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வரும் தகவல்கள் அடிப்படையில் உரிய விசாரணை நடத்திடவும், ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் மட்டுமின்றி மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களிலும், ஆவின் ஒன்றியங்களிலும் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு மற்றும் தரம் குறித்து உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கிடவும் உத்தரவிட்டு அதனை தீவிரமாக கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

அத்துடன் முதல்வர் அறிவித்த பாலுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் (G.O (4D) No. 12 date 29.10.2024) குறிப்பிட்டுள்ளவாறு டிசம்பர் 2024க்குள் தமிழ்நாடு முழுவதும் 30% அளவிற்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கிடவும், மார்ச் 2025க்குள் அது 50% ஆக அதிகரிக்கப்படுவதோடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் 100% கணினி மயமாக்கப்பட்டு 100% உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேற்கண்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள உடனடி ஒப்புகைச் சீட்டு, 100% கணினி மயமாக்குதல் உள்ளிட்ட விசயங்களை தீவிரமாக அமுல்படுத்த முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் அதன் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தாமதமின்றி விரைந்து செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x