அவிநாசி சாலை மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் கட்டமைப்பு உடைப்பு: கார் மீது விழுந்ததில் கண்ணாடி சேதம்


கோவை அவிநாசி சாலையில், ஹோப்காலேஜ் சந்திப்பு அருகே பாலத்திலிருந்து கார் மீது விழுந்து இருக்கும் கான்கிரீட் கட்டமைப்பு.

கோவை: அவிநாசி சாலை மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் கட்டமைப்பு உடைந்து கார் மீது விழுந்ததில் கண்ணாடி சேதம் ஏற்பட்டது.

கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் கான்கிரீட் கிரிட்கள் பொருத்தும் பணிகளும், 4 இடங்களில் ஏறு தளங்கள், 4 இடங்களில் இறங்கு தளங்கள் கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவிநாசி சாலையில் பீளமேட்டில் இருந்து ஹோப்காலேஜ் சந்திப்புக்கு செல்லும் வழித்தடத்தில் நேற்று (டிச.3)வாகனங்கள் வழக்கம் போல் வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு கார் மீது, திடீரென மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் கட்டமைப்பு உடைந்து விழுந்தது. அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், காரை உடனடியாக அதே இடத்தில் நிறுத்தினார்.

ஓட்டுநர் வெளியே வந்து பார்த்த போது, மேலே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் உடைந்து விழுந்தது தெரியவந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதே கட்டமைப்பு அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுந்திருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும். மேலும், உடைந்து விழுந்த கட்டமைப்பால் பாலத்தின் கட்டுமானத் தரம்குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உரிய பாதுகாப்பு மற்றும் தரத்துடன் கட்டுமானப் பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

x