5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்​வையற்ற மாற்று திறனாளிகள் சாலை மறியல்


அரசு பதவிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் முன்பாக, பல்வேறு குழுவாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். | படம்: ம.பிரபு |

சென்னை: அரசு பதவிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மெரினா காமராஜர் சாலையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு பதவிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடை முறையாகக் கணக்கிட்டு, சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமனம் வழங்க வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதையொட்டி அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு மூலம் அரசு நிதி உதவிபெறும் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை கண்டறிந்து நிரப்ப வேண்டும். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வுகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசு பதவிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் ‘சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை’ கருப்பு தினமாக அனுசரித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் டிச.3-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்ததால், சென்னை காமராஜர் சாலையில், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் முன்பு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்லாததால், அவர்களை போலீஸார் கைது செய்து, அருகில் உள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து கைது செய்யப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, “இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். ஆனால் எங்களது கோரிக்கைகளை அரசு செவிகொடுத்து கேட்கவில்லை. மாற்றுத் திறனாளிகளை, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்துக்குள் செல்வதற்கே காவல்துறை அனுமதிக்கவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

x